Tuesday, March 4, 2014

“கலாய் பூசலையோ கலாய்?”

0 மறுமொழிகள்

(துருத்தி படம் விக்கிமீடியாவில் இருந்து)


நடராஜன் கல்பட்டு    
                                
வந்திட ஞாயிறு கேட்டிடும் வாசலில் கணீரென்று ஒரு குரல். “கலாய் பூசலையோ கலாய்?” என்று.  வாசலுக்கு வந்து பார்த்தால் கண்டிடலாம் குரல் எழுப்பியவரை.  அவர் தோளிலே கோணிச் சாக்கில் சுருட்டிச் சுமர்ந்திதிருப்பார் அவரது வாழ்வாதார சுமைகளை.

அப்படி என்ன இருக்கும் அதனுள்?  ஆட்டுத் தோலிலால் ஆன ஒரு பை, சின்ன கடப்பாரை ஒன்று, ஒரு கிடுக்கி, தடியான கம்பி வடிவில் ஈயம், ஒரு பொட்டலத்தில் நவச்சாரப் பொடி, ஒரு சின்ன பாத்திரம் நவச்சாரப் பொடியை தேவைப் படும்போது வைத்துக் கொள்ள, மற்றும் கந்தல் துணிகள் கொஞ்சம் இவைதான் அந்த கோணிச் சுருளுள் அவர் எடுத்துச் செல்லும் ஆஸ்தி.

அவர் செய்திடும் தொழில்?  பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசுதல்.  இல்லத்தரசிகள் ஆவலோடு காத்திருப்பார்கள் அவர் வருகைக்காக, விட்டில் உள்ள பழய பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசிட வேண்டுமே.  ஈயம் போன பித்தளைப் பாத்திரங்களில் சமைத்தால் அது உடலுக்குக் கெடுதல் ஆயிற்றே.

அம்மா பழய பித்தளைப் பாத்திரங்களை எல்லாம் வெளியில் கொண்டு வருவாள்.

அதற்கு ஈயம் பூசிடத் தர வேண்டிய கூலியை பேரம் பேசி முடித்த உடன், வந்தவர் தன் மூட்டையைப் பிரிப்பார்.  அதிலிருந்து எடுத்த கைக் கடப்பாரையினால் ஒரு அரை வட்ட வடிவில் தோட்டத்தில் குழி ஒன்று தோண்டுவார்.  பின் அக்குழியின் அடிப் பாகத்தோடு இணைத்திடும் வகையில், அதனருகிலேயே ஒரு எலி வளை போல வட்டத் துளை செய்து, அதில் தன் ஆட்டுத் தோல் பையின் ஒரு பக்கம் உள்ள குழாயை பொருத்திடுவார்.  பின் அப்படித் தயார் செய்த வற்றை குழைத்த சேற்றால் பூசுவார்.  தயாராகி விடும் அவரது உலை.

வீட்டில் இருந்து அடுப்புக் கரி வாங்கி அதை அரை வட்டக் குழியுள் போட்டு, அதைப் பற்ற விட்டுத் தன் வேலையைத் துவக்குவார்.

அவரது வலது கை தோல் துருத்தியை இயக்கிட, மறு கையில் கிடுக்கியால் பிடித்த பாத்திரத்தை நெருப்பில் சூடு காட்டி, சற்று துருத்தியை இயக்குவதை நிறுத்தி விட்டு, கந்தைத் துணியில் நவச்சாரப் பொடியினைத் தொட்டு அதை பாத்திரத்துள் பூசுவார்.  அதற்குப் பிறகு ஈயக் கம்பியினை எடுத்து அதனால் பாத்திரத்துள் சற்றே தொடுவார்.  சூட்டில் ஈயம் உருகிட அதை கந்தல் துணியால் பாத்திரம் பூராவும் சுற்றிச் சுற்றித் தேய்த்து பரப்புவார்.

நேற்று வரை பல் இளித்துக் கொண்டிருந்த பித்தளைப் பாத்திரங்களின் உட் புறம் வெள்ளி போல் பள பளக்கும்.

வேலை முடித்து கூலியை வாங்கிக் கொண்டு கேட்பார், “அம்மா கொஞ்சம் கந்தத் துணி இருந்தா குடுங்கம்மா” என்று.  கலாய் பூசிடும் போது அவர் உபயோகிக்கும் கந்தல் துணி கொஞ்சம் பொசுங்கி விடும்.  மீண்டும் வேலைக்கு வேண்டுமே கந்தல் துணி.

கலாய் பூசுபவர் நகர்ந்ததும் அண்ணன் தம்பிகள் நாங்கள் ஆரம்பிப்போம் எங்கள் வேலையை.  உலையில் தண்ணீரை ஊற்றி சூட்டைத் தணித்து அதனுள் இருக்கும் முற்றிலும் எரிந்திடாத கரித் துண்டுகளையும் சாம்பலையும் எடுத்துத் தரையில் பரப்பி, அதில் இருந்து கிடைத்திடும் புதையலை”ப் போட்டி போட்டுக் கொண்டு பொறுக்குவோம்.  புதையல் என்ன தெரியுமா?  பாத்திரத்தில் இருந்தும், அவர் கையில் இருக்கும் துணியில் இருந்தும் நெருப்பில் விழும்போது உருகித் திரண்டு சிறு சிறு குண்டுகளாய் மாறி இருக்கும் ஈயம்!

கலாய் பூசுபவர் சற்றே வசதியானவர் என்றால் அவர் வைத்திருப்பார் கீழுள்ளது போன்ற ஒரு துருத்தியை.

இன்று காண்பது இல்லை வீடுகளில் முன் போல் பித்தளைப் பாத்திரங்களும், கலாய் பூசுவோரும்.  கூடவே மறைந்தது “புதையல்” தேடும் இன்பமும்.




மறுமொழிகள்

0 comments to "“கலாய் பூசலையோ கலாய்?”"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES