Wednesday, February 14, 2018

எண்ணாகப் பிணைப்பு

0 மறுமொழிகள்


Sunday, October 16, 2016

இராமாயணம் / கீமாயணம்

0 மறுமொழிகள்நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி ‘ இழையில் , எம்.ஆர். ராதா நடித்த ராமாயணம் / கீமாயணம் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. அந்த நாடகம் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய நாடகம். இவர் எழுதிய ராமாயணம் பகுத்தறிவுப் புத்தகம், காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. அதையே அவர் நாடகமாக எழுதினார். இராவணனை நாயகனாகக் கொண்ட அந்த நாடகம் கீமாயணம் என்றும் அழைக்கப்பட்டது. பல ஊர்களில் அரங்கேற்றப்பட்டது. திருச்சியில் எம்.ஆர். ராதா அவர்கள் பலமுறை அரங்கேற்றியிருக்கிறார்.

இந்த நாடகத்தை கடலூர் திராவிட கழகத்தினர் என் பெரியப்பா கே.எம். வேலு தலைமையில் அரங்கேற்றினர். என் பெரியப்பாதான் இராவணன் வேடமேற்று நடித்து புகழ் பெற்றார். நான் அப்போது குழந்தை, காட்சிகள் எதுவும் நினைவில்லை. ஆனால், நாடகத்தின் முதற்காட்சியில் கம்பீரமாகத் தோன்றும் இராவணன் பேசும் வசனம் (என் அப்பா சொல்லக் கேட்டு ) எனக்குத் தெரியும். அதை கீழே தருகிறேன்.
“சிங்கத்தின் குகையிலே சிறு நரிகள்

செந்தாமரை ஓடையிலே முதலைகள்

தமிழகத்திலே ஆரியர்கள்.................

ஆடு மாடு  மேய்க்க வந்த ஆரியர் கூட்டம்

இன்று நாடு பிடிக்கத் தொடங்கி விட்டது.

இதை இப்படியே விட்டு விட்டால்

நாடு மோசக்காரர்களின் வேட்டைக்காடு   ஆகிவிடும்.

இதை ஒழிக்கத் திட்டம் தேவை .......”

என்பதே. தங்கராசு அவர்களின் எழுத்துக்கு இது ஓர் எடுத்துக் காட்டு.


திருவாரூர் தங்கராசு சுயமரியாதைக்காரர். நல்ல எழுத்தாளர்.சிறந்த பேச்சாளர். பெரியாரின் தொண்டர். மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.  பெரியாருக்கு அடுத்தபடி , தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் பேசி கருத்துகளைப் பரப்பும் திறம் படைத்தவர். நான்  ஒரே ஒரு முறைதான் இவரது உரையைக் கேட்டிருக்கிறேன்.
     இரத்தக் கண்ணீர் நாடகம் இவர் எழுதியதே. பின்னர் திரைப்படமான இரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவரும் இவரே. இறுதிவரை கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த இவர்  ,  கடந்த 2014ஆம் ஆண்டு , தனது   87ஆவது வயதில்   இயற்கை எய்தினார்.

-சிங்காநெஞ்சன்


Thursday, September 8, 2016

வ.உ.சி. திருமண அழைப்பிதழ்

0 மறுமொழிகள்

வ.உ.சிதம்பரம்பிள்ளையவர்களுக்கும் மீனாட்சியம்மாளுக்கும் நடந்த திருமண அழைப்பிதழ்.

இதனை நம் சேகரத்திற்காக வழங்கிய நண்பர். டாக்டர். சந்திரபோஸ் அவர்களுக்கு நன்றி.
-சுபா


Sunday, May 1, 2016

வாழவந்தம்மன் கோவில்

0 மறுமொழிகள்
-உதயன்--


வாழவந்தம்மன் கோவில், அருப்புக்கோட்டையில் உள்ளது. பொதுவாக வேண்டுதலுக்கு உருவ அமைப்புக் கொண்ட சுடுமண் சிற்பங்கள் செய்து வைப்பர்கள், இந்த கோவிலில் கருங்கல்லிலேயே செய்து வைத்துள்ளனர்.
குழந்தை உண்டாகி தங்காமல் இருப்பவர்கள், அல்லது குழந்தை பிறந்து சில வருடங்களில் இறப்பது அதற்க்காக இது போல் கற்சிற்பங்கள் செய்யலாம். இது என் கற்பனையே.

விபரம் அறிந்தவர்கள் கூறவும்.


Tuesday, March 8, 2016

படரும் பண்பாடு … மயானக் கொள்ளைத் திருவிழா

0 மறுமொழிகள்
படரும் பண்பாடு … மயானக் கொள்ளைத் திருவிழா
கோ.செங்குட்டுவன்


இது ஒரு வரலாற்று முரண் நகைதான்…

எவ்வளவுதான் பகுத்தறிவின் பார்வையோடு, பெண்ணியச் சிந்தனைகளைத் தூவினாலும்,

இதோ, அங்காள பரமேஸ்வரியாக, இன்னும் பல பெண் தெய்வங்களாக ஆடி வரும் கூட்டம்.

மருள் வந்து ஆடிவருவதோடு மட்டுமல்ல, அருள்பாலிக்கவும் செய்கிறார்கள்.

மண்ணின் மணத்தோடு இன்று (08.03.16) மாலை, விழுப்புரத்தில் நடந்த மயானக் கொள்ளைத் திருவிழா.

ஆக்ரோஷமாக ஓடிவரும் ரேணுகா அங்காள பரமேஸ்வரி, மயானத்திற்குள் வந்தவுடன் சாந்தமடைந்து, பின்னர் கோயிலுக்குத் திரும்புகிறாள்.

கூடியுள்ள பெருங்கூட்டமோ, அம்மனைத் தரிசித்ததோடு மட்டும் நில்லாமல், தம் முன்னோரையும் நினைவுகூரத் தவறவில்லை.

காலம் சென்றவர்களின் சமாதிகள், அவரவர் சக்திக்கேற்றவாறு அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகள். கொழுக்கட்டை, சுண்டல், பொறி கடலை, இனிப்புப் பலகாரங்கள்.

இவற்றின் ஊடாக சிலருக்கு பாக்கெட் சாராயமும், குவார்ட்டர் பாட்டிலும் படையலில் முக்கிய இடம் வகித்ததையும் பார்க்க முடிகிறது.

சங்ககால தமிழர்கள் கள் குடித்தனர். அவர்களது இறுதிச் சடங்கில் கள்ளும் இடம் பெற்றது. அவர்களைப் புதைக்கும்போது, உடன் வைக்கப்பட்டது கள்.

நடுகற்களிலும் கூட கள் கலயங்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
வரலாறு தொடருகிறது… பண்பாடு படருகிறது… மயானக் கொள்ளைத் திருவிழாக்களில்..!


--- கோ.செங்குட்டுவன்


Saturday, February 13, 2016

கருத்தைக் கவர்ந்த கற்படிமம்

0 மறுமொழிகள்
பேராசிரியர், கவிஞர் த.பழமலய் அவர்களை, அவரது இல்லத்தில் அடிக்கடி சந்தித்துப் பேசுவேன்.

அப்போதெல்லாம், அவரதுப் புத்தக அலமாரியில் இருக்கும் “கல்” ஒன்று என் கண்ணை உறுத்திக் கொண்டே இருந்தது. “பேப்பர் வெயிட்டாக இருக்குமோ?”

ஒருநாள் கேட்டுவிட்டேன். “என்னங்க ஐயா இது?”

“இது ஃபாசில். கல்லாகிப் போன ஒரு நத்தை. அரியலூர் பகுதியில் நிறையக் கிடைக்கிறது.” முன்னும் பின்னும் அடியுலுமாகத் திருப்பிக் காண்பித்தார். வியந்தேன்.

உண்மைதான். அப்பகுதியில் உள்ள சாத்தனூர் கல் மரங்களும், டைனோசர் முட்டைப் படிமங்களும் உலகப் பிரசித்துப் பெற்றவை.

ஏன், நம்ம மாவட்டத்து, திருவக்கரைக் கல் மரங்களும் பிரசித்திப் பெற்றவைதானே.

இந்த ஃபாசில், கற் படிமங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவது,

90களில் தொடக்கத்தில் எண்ணாயிரம் கிராமத்தில் கிடைத்ததாகச் சொல்லப்படும் ஒரு விலங்கின் கற்படிமம்,

பொம்மையார் பாளையம் ஓடையில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் குழந்தையின் மண்டை ஓடு (கல்லாகிப் போனது).

இவையும் பல கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்கிறார்கள்.

எண்ணாயிரம், பொம்மையார்பாளையம் கண்டெடுப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா? சரியானப் பதிவுகள் இருக்கின்றதா?

எனக்கு இதுவரைத் தெரியவில்லை.

வல்லோர்தான் விளக்க வேண்டும்..!

கோ.செங்குட்டுவன்.
13.02.2016


Monday, November 9, 2015

மகேந்திர வர்மப் பல்லவனின் சத்துருமல்லேஸ்வராலயம்

0 மறுமொழிகள்
சத்துரு மல்லன்...

மகேந்திர வர்மப் பல்லவனின் விருதுப் பெயர்களுள் ஒன்று. இந்தப் பெயராலே தளவானூரில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம்தான் சத்துரு மல்லேஸ்வரம். குடைவரைக் கோயில். பிரம்மாண்டப் பாறையில் வடக்குப் பார்த்த நிலையில் முகமண்டபம் அமைந்துள்ளது. உள்ளே கிழக்குப் பார்த்துள்ள திருநிலையறையில் ஆவுடையார் காட்சியளிக்கிறார்.  இது சற்று சாய்ந்த நிலையில் இருக்கிறது.

அருகிலேயே தட்டு ஒன்றில் குங்குமம், விபூதி தயாராக வைத்துள்ளனர். தரிசனம் செய்யும் பக்தகோடிகள், கையில் இருக்கும் விபூதி குங்குமத்தின் மிச்ச மீதியை வாயிற் காப்போரின் முகங்களில் பூசிவிட்டுச் செல்கின்றனர். இதனால் அந்த அழகிய துவார பாலகர்கள், பூதகணங்களைப் போல் காட்சியளிக்கின்றனர்.


மண்டபத்தின் வெளிப்புறத் தூண்கள் ஒன்றில், பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்ட வடமொழிச் செய்யுள் கீழ்க்காணும் வாசகத்துடன் அமைந்துள்ளது.

“தண்டாநத நரேந்த்ரரேண
நரேந்த்ரனை காரித
ஸத்ருமல்லேண ஸைலேஸ்மின்
ஸத்ருமல்லேஸ்வ ராலய”

தனது போர் வீரர்களால் பகைவரை அடக்கிய நரேந்திரனாகிய சத்துருமல்லன் என்னும் அரசனாலே, இந்த மலையின் மேல் சத்துரு மல்லேஸ்வராலயம் என்னும் கோயில் அமைக்கப்பட்டது, என்பது இக்கல்லெழுத்துச் சாசனத்தின் பொருளாகும்.

இக்குடைவரைக் கோயிலுக்கு மேலே சமணப் படுக்கைகளும் காணப்படுகின்றன.


வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தளவானூர் குடைவரைக்குச் செல்ல சாலை வசதியேதும் கிடையாது. கோயிலுக்குக் கம்பிவேலி போட்டு, எனாமல் போர்டுகளை வைத்ததுடன் தன்னுடையக் கடமையை நிறுத்திக் கொண்டது தொல்லியல் துறை. சுற்றிலும் இருக்கிற தனியார் நில உரிமையாளர்கள் மனது வைத்தால்தான், அவர்தம் வயல் வரப்புகளினூடாக சத்துருமல்லேஸ்வராலயத்தை நாம் அடைய முடியும்.

இக்குடைவரைக்கு ஒருசில கி.மீ. தூரத்தில்தான், மகேந்திர வர்மனின் முதற் குடைவரையான, மண்டகப்பட்டு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.தளவானூர்:
விழுப்புரம்–செஞ்சி சாலையில் பாலப்பட்டு எனும் இடத்திற்கு முன்னதாக கிழக்கில் 7கி.மீ. பயணிக்க வேண்டும்.  
நன்றி: கோ. செங்குட்டுவன் 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES