சரயு நதிக் கரையில். அயோத்தி மாநகரம் சரயு நதிக்கரையிலேயே அமைந்திருக்கிறது. வடக்கே இமயமலையின் மானசரோவரில் உற்பத்தி ஆகும் சரயு நதி ஓடி வளப்படுத்திய நாடு கோசலநாடு. இங்கே தான் அயோத்தி மாநகரம் மனுவால் ஸ்தாபிக்கப்பட்டது எனவும், ஶ்ரீராமாவதாரத்துக்காகவென்றே தேவர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். இந்த நதிக்கரையில் பிறந்த ஶ்ரீராமர் தான் வந்த வேலை முடிந்ததும், திரும்பி வைகுண்டத்துக்கு ஏகியதாகச் சொல்லப்படுவதும் இந்த நதியில் மூழ்கித் தான். அதைக் குலசேகர ஆழ்வார் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.
சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கானம் அடைந்தவனே
அற்றவர்கட் கருமருந்தே அயோத்தி நகர்க் கதிபதியே
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே
சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ
-குலசேகராழ்வார்
இந்த நதியைக் கம்பன் கீழ்க்கண்டவாறு புகழ்கின்றான்.
இரவி தன் குலத்து எண் இல் பல் வேந்தர் தம்
பரவு நல் ஒழுக்கத்தின் படி பூண்டது
சரயு என்பது தாய் முலை அன்னது இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிருக்கெல்லாம்”
சூரியகுலத்து மன்னர்களெல்லாம் எவ்வாறு நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்கினரோ, தடம் மாறாமல் இருந்தனரோ அவ்வண்ணமே இந்நதியும் இன்று வரை தடம் மாறாமல் இருப்பதாகச் சொல்கின்றனர். கம்பரும் மேலே கண்ட பாடல் அதையே சொல்லி இருப்பதோடு ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அத்தனை முக்கியத்துவம் கோசலநாட்டுக்கு சரயு நதியின் நீர்வளம் தருகிறதாகச் சொல்கின்றார். ஒரு தாயைப் போலவே சரயு நதி கோசலநாட்டு மக்களை வாழ்வித்து வருகிறது. ஶ்ரீராமனின் பாதையில் இன்னமும் செல்வோம்.
சரயு நதிக்கரையில் படகில் ஏறும் மக்கள்.
மறுமொழிகள்
0 comments to "ஶ்ரீ ராமனின் பாதையில் 1 சரயு நதி"
Post a Comment