நன்றி படம் pavithranandakumar.blogspot.com
பந்தி விசாரணை என்பது கலியாணத்தில் எவ்வளவுதான் நல்லசாப்பாடு பலகாரங்கள் எனச் செய்து வைத்திருந்தாலும் அதை முறைப்படி பரிமாற வேண்டும். அதுதான் கலியாணம் முதலான விழாக்களைச் சிறப்பாக மாற்றும். வந்த விருந்தினர்களை நாம் முறையாக வரவேற்று விருந்தளிக்க வேண்டும். அவர்களது மனம்நிறைய வயிறுநிறையச் சாப்பிட்டுச் செய்ய வேண்டும்.
இப்போதெல்லாம் இருக்கைகளில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். முன்பெல்லாம் அனைவரும் தரையில் அமர்ந்தே சாப்பிடுவர். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் ஒருமுறை காரைக்குடிக்கு வந்திருந்தபோது அவரை, ராஜா முத்தையாச் செட்டியார் அவர்கள் தங்களது இல்லத்திற்கு விருந்தினராகச் சாப்பிட வருமாறு அழைத்துள்ளார். அமைச்சர் தென்னரசு முதலான காரைக்குடி நகரத் தி.மு.க.வினர் அண்ணாதுரை அவர்களிடம், “செட்டியார் எதிர்கட்சியைச் சார்ந்தவர் எனவே அவர்களது வீட்டிற்கு விருந்தினராகச் செல்ல வேண்டாம்“ எனக் கூறியுள்ளனர். அது கேட்ட அண்ணாதுரை அவர்கள், “இல்லை யில்லை, அவசியம் போயாக வேண்டும், 1932இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது சென்னையில் ஒரு பெரிய ஊர்வலம் நடைபெற்றது. அப்போது கொடிபிடித்துக் கொண்டு செல்ல வேண்டும், அதற்கு யாராவது உயரமானவர்கள் தேவைப்பட்டனர். முத்தையாச் செட்டியார் அவர்கள் நல்ல உயரம். அவர் தானே முன்வந்து, நான் நல்ல உயரமானவன் நானே ஊர்வலத்திற்கு முன்வரிசையில் கொடிபிடித்துச் செல்கின்றேன் என்றார். சொன்னபடியே ஊர்வலம் துவங்கி முடியும்வரை கடைசிவரை கொடிபிடித்துச் சென்றார். இந்தக் காரணத்திற்காக கட்டாயம் நான் அவரது வீட்டிற்கு விருந்திற்குச் செல்வேன் என்று அண்ணாதுரை கூறிக் கொண்டே முத்தையா செட்டியார் அவர்களது கானாடுகாத்தான் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றார்.
பெரிய இலை, தாட்டெலை.
அண்ணாதுரை அவர்கள் சற்று உயரம் குறைந்தவர்.
கீழே தரையில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்து கொண்டு இலையில் வைக்கப்பட்ட பதார்த்தங்களை எடுக்க முடியவில்லையாம். எட்டி எட்டி எடுத்துச் சாப்பிட்டராம். தான் இவ்வாறு எட்டி எட்டி எடுத்துச் சாப்பிட்டதைப் பின்னர் அவர் நகரத்தாரின் விருந்தோம்பல்பற்றிப் பெரியதாக பலரிடமும் எடுத்துச் சொல்லியுள்ளார்.
எனவே இலையில் பரிமாறுவதென்பது விருந்தில் முக்கிமானதாக உள்ளது.
சாப்பிடும்போது அப்படியே அள்ளி யள்ளி வைத்தாலும் சாப்பிடுவோருக்குத் திகட்டிப் போயிவிடும். ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாக வைத்து, விருந்தினர் சாப்பிடுவதைப் பார்த்துப் பார்த்து, அவர்கள் எதை விரும்பிச் சாப்பிடுகின்றனர் என்பதை அறிந்து அதைமட்டும் விருந்தினர் விரும்பும் வகையில் வைத்து உண்ணச் சொல்ல வேண்டும்.
நகரத்தார்கள் விருந்தில் இவ்வாறு விருந்தினர் ஒவ்வொருவரையும் சிறப்புடன் வரவேற்று அவர்கள் விரும்பிச் சாப்பிடும் பலகாரங்களைப் பார்த்தும் அவர்களிடம் விசாரித்தும் அறிந்துகொண்டு மேலும் விருந்தினர் விரும்பும் வகையில் உண்ணச் செய்வதையே பந்திவிசாரணை என்கின்றனர்.
சமையல் செய்த பலகாரங்களைப் பந்தி இலையில் உரிய முறையில் வைக்க வேண்டும்.
இலையில் பரிமாறும்போது நுனியிலையில் வைக்க வேண்டியன என்ன என்ன?
வாலை இலையின் ஒவ்வொரு பாகத்திலும் வைக்க வேண்டியன என்ன என்ன?
வாலையிலையின் அடிப் பகுதியில் கூட்டு வைக்க வேண்டும். அடுத்தது பொரியல், அடுத்தது மண்டி. கடைசியாகத்தான் சிப்ஸ் வடை அப்பளம் இவைகளை வைக்க வேண்டும்.
கூட்டு வழிந்து ஓடினாலும் சாதத்திற்கு வந்துவிடும். எனவே இப்படித்தான் இலையில் காய் வைக்கவேண்டும் என்று ஒரு முறை உள்ளது.
ஒருமுறை எங்களது கல்லூரியில் (இராசாமி தமிழ்க்கல்லூரி, காரைக்குடி) நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் நடைபெற்றது. அப்போது எங்களது ஆச்சி வந்து எனக்கு இலையில் காய் வைக்கும் முறைபற்றிக் கூறினார்கள். நான் ஒரு இலையில் காய் வைக்கும் இடத்தை மாற்றி வைத்துவிட்டேன். அதைக் கவனித்த ஆச்சி அவர்கள், “என்ன வள்ளியம்மை, இவ்வளவு படிச்சிருக்கே, இலையில் காய் வைக்கத் தெரியவில்லையே“ என்றார். அதிலிருந்து எந்த ஒரு விருந்திரும் காய்கறிகளை உரிய இடத்தில் வைத்துப் பரிமாறுவதில் மிகவும் கவனமாக இருப்பேன்.
சாப்பிட வருபவர்களை வரவேற்று, பந்தியில் உரிய இடத்திற்கு அழைத்துச் சென்று அமரச் செய்து, அவர்கள் விரும்பி உண்பதை விசாரித்துச் சாப்பிடச் செய்ய வேண்டும். இவ்வாறு பந்திவிசாரணை செய்து நகரத்தார்களின் மரபு ஆகும்.
இப்பொழுது காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சம் மாறிப்போச்சு. ஆனால் கண்டனூர் நகரத்தார்கள் இன்றைக்கும் இந்த முறை மாறாமல் கடைபிடிக்கின்றனர்.
பிள்ளையார் பட்டி கோயில் நகரத்தார் விழாக்களில் எல்லாம் இரணிகோயில் நகரத்தார் பந்திவிசாரணை செய்வர். விழா நிறைவு பெற்றவுடன், பந்திவிசாரணை செய்தவர்களுக்கு எனத் தனியொரு நாளில் ஒரு விருந்து நடைபெறும்.
அம்மா வள்ளி அவர்கள் சொன்னபடி எழுதியது
அன்பன்
கி.காளைராசன்
மறுமொழிகள்
0 comments to "பந்தி விசாரணை"
Post a Comment