எங்கும் காண முடியாத சிற்பத்தை நகர வயிரவன்பட்டி கோவிலில் கண்டேன். அது அனுமனை இராமபிரான் வணங்கும் சிற்பம் ஆகும். வயிரவன்பட்டி நகரத்தார்களின் ஒன்பது கோவில்களில் ஒன்று. எங்கள் வயிரவங்கோவில் பங்காளிகள் நிர்வாகம். அவர்களுக்கு கிபி 712ல் பாண்டிய மன்னனால் தரப்பட்டது எனக் கோயில் குறிப்புக்கூறுகிறது.பிள்ளையார்பட்டிக்கு ஒரு கல் தொலைவில் காரைக்குடி திருப்பத்தூர் சாலையில் கோவில் அமைந்துள்ளது. வளரொளிநாதர் வடிவுடையம்மை அருள்பாலிக்கும் சிற்பக்களஞ்சியம். வயிரவமூர்த்திக்குத் தனிச்சன்னதியும் விழாக்களும் சிறப்பு. இசைத்தூண்கள், ஒரேகல்லில் சண்டிகேசர் கோட்டம், மூலிகைச் சித்திரங்கள், வயிரவதீர்த்தம், ஏறழிஞ்சில் மரம், சத்திரம் எனப் பல சிறப்புக்களும் உண்டு.
சுவாமி கருவறை வடபால் சுவரில் அனுமனை இராமபி்ரான் வணங்கும் சிற்பம் அமைந்துள்ளது. மருந்துமலையை அனுமன் கொணர்ந்ததால் வணங்கப்படுகி்றார் என்று அறிவிப்புப் பலகை சொல்கிறது.கம்பனை த.இ.பல்கலைத் தளத்தில் பார்த்தேன். இராமனின் மயக்கமும் மூர்ச்சையும் வீடணன் முயற்சியும் சாம்பவான் நிலையும் உபாயமும் அனுமனின் வீறும் இமயமலை மருந்துமலை வர்ணனையும் கவர்ந்தன.அனுமனை இராமன் தழுவுகிறான். வாழ்த்துகிறான். வணங்கவில்லை. பிற்பாடு புல்லுக என்று இராமன் வாழ்த்தியபோது கூட அனுமன் ஒதுங்கி வணங்குகிறான்.
இருந்தாலும் அனுமனின் சிற்பத்தைப் பெரிதாகவும் அருகில் இராமனை வணங்குவது போலவும் அமைத்த சிற்பியின் மன வானில் அன்று எழுந்திருந்த எண்ணத்தை யார் அறிவார்? சரியான எண்ண அமைதியும் தக்கோர் அனுமதியும் இல்லாமலா சிற்பம் வடித்திருப்பார்?
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
மறுமொழிகள்
0 comments to "அனுமனை வணங்கும் இராமன்"
Post a Comment