இதில் ஜவ்வாது மலையிலிருந்து செங்கம் வழியாக இறங்கும் போது மேல்பட்டு கிராமத்தை கடக்க வேண்டும். மலை நீரோடைகள் நிறைந்த பசுமையான கிராமம். இங்கு சுமார் 140 வருடங்களுக்கு முன் பிரிடிஷ்காரர்கள் கட்டியுள்ள அருமையான தங்குமிடம் உள்ளது. எந்த பாதை வசதியும் இல்லாத காலத்தில் குதிரை, கழுதை ஆகியவற்றின் மீது பொருட்களை கொண்டு வந்து கட்டியுள்ளனர்.
மேல்பட்டு கிராமம் குறித்து இன்னொரு முக்கிய குறிப்பு, சங்க இலக்கியத்தில் இந்த பகுதி நன்னன் சேய் நன்னன் என்பவன் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், இவனுடைய தந்தை நன்னன் பர்வதமலை என்ற இடத்தில் ( செங்கம் அருகே உள்ள இன்னொரு பழமை சிறப்பு மிக்க மலை. சுமார் 4 ஆயிரம் அடிகள் உயரம் கொண்ட அந்த மலை இப்போது ஆன்மீக தளமாக புகழ்பெற்றுள்ளது ) இருந்து ஆட்சி செய்து, பிறகு அதியர்களால் விரட்டியடிக்கப்பட்டபோது, போரில் உயிர் தப்பி வந்து ஜவ்வாது மலையின் இந்த பகுதியில் ஆட்சி செய்தவன். இவனிடம் பரிசில் பெற வந்த புலவர் ஒருவர் குறிப்பிட்டுள்ள வழித்தடங்கள், அடையாளங்கள் இப்போதும் அப்படியே உள்ளன. அதில் ஒரு பாடல் வருடம் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டுள்ள மலை நிலத்தை கடந்து நன்னன் சேய் நன்னன் உள்ளதாக குறிப்பிடும்.
செங்கத்தில் இருந்து பரமானந்தல் என்ற கிராமத்தை கடந்து சுமார் 25 கிலோ மீட்டர்கள் வளைவுகள் நிறைந்த மலை பாதை வழியே பயணித்து மேல்பட்டு கிராமத்துக்கு செல்லும் முன் இந்த நீர் மரம் அருகே சற்று இளைப்பாற உட்கார்ந்தால் இன்றும் மணிக்கு ஒரு முறை உங்களை தழுவி தாலாட்டும் சாரல் மழை.
வாலியம் பாறை - குள்ளர் குகைகள்
அப்பகுதியை சேர்ந்த மலைவாசி மக்கள் செவி வழி செய்தியாக சொல்வது, வாலியம்பாறையில் வசித்த வாலியர்கள் என்ற கூட்டம் கட்டிய குள்ளர் குகைகள் அவை என்றும், 3 அடி உயரம் கொண்ட வாலியர்கள் பிறகு வடக்கே எங்கோ சென்று விட்டதாகவும் சொல்கிறார்கள். ஏராளமான சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து மேலே அகலமான ஒரு பெரிய பாறையை கூரையாக வைத்து குகை போல அமைத்துள்ளனர்.
போளுரிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் மலை பாதையில் பயணித்தால் அத்தியூரை அடையலாம். அங்கிருந்து கால்நடையாக காட்டுப்பாதையில் 3 கிலோமீட்டர் சென்றால் மேல்சிப்பிலி என்ற மலை கிராமம் வரும். உண்மையான காட்டுவாசி, மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதி இது. யார் சென்றாலும் உடனே இளநீரை வழங்கி இளைப்பாற சொல்லிவிட்டு, சாமை அரிசி சோறு பொங்கி, பலாபழம், வள்ளி கிழங்கு, சிறு சிறு மலை வாழை பழங்களுடன் விருந்து சாப்பிட வைப்பார்கள். சராசரியாக 4 .5 அடி உயரம், கருத்த, உறுதியான தேகம், சுருண்ட, நீண்ட முடி, எச்சரிக்கை கலந்த அன்பு என உணர்ச்சி கலவையான மக்கள். காலை 6 மணி தொடங்கி மதியம் 12 மணி வரை கடுமையான மலை நிலத்தில் உழுதுவிட்டு, விலை பொருட்களில் அன்றைய தேவைக்கு ஏற்ப கொண்டு சென்று வார சந்தைகளில் விற்றுவிட்டு தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு, கரடு, முரடான மலை பாதைகளில் மேலும் கீழுமாக சாதரணமாக 50 கிலோ மீட்டர் நடந்து விட்டு வந்து, மூச்சு கூட வாங்காமல் கிராமத்துக்கு புதிதாக வந்துள்ள வெளியாட்களிடம், வாலியர் குகைய பாக்கனும்னா, அங்கன நெட்டு குத்தா நிக்குதே ரெண்டு மலை அத ஏறி எறங்கணும், நாங்க வேனா துணைக்கு வரவா என அசராமல் கேட்கும் ஒரு நபருக்கு வயது கேட்டால் 85 என சொல்லி சிரிப்பார்.
மலை கிராம குடிசைகள் நிறைந்த எல்லாத் தெருவிலும், எல்லாருக்கும் பொதுவான ஒரு தானிய கூடு 30 அடி உயர்த்தி நிற்கும். குடிசைகளுக்குள் வீட்டுக்கு தேவையான அளவு சிறிய தானிய கூடு தனியாக இருக்கும். ஆடு, மாடுகளை போது பட்டியில் கட்டியிருப்பார்கள். கோழி, பன்றிகளை வீட்டுக்குள் விட்டு வைப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் 3 முதல் 4 அடி உயர நாய்கள் துணையாக இருக்கும். இவர்கள் துணை இல்லாமல் குகை தேடி பயணித்தால் வீடு திரும்புவது அசாத்தியம். அவ்வளவு திருப்பங்களும், பள்ளத்தாக்குகளும், காட்டு விலங்குகளும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பாதை. கையில் நீண்ட கழிகளை ஊன்றுகோலாக எடுத்துக்கொண்டு, ( மனிதன் ரெண்டு கால்களில் நடக்கிறான் என யாரோ தவறாக பெருமைக்கு சொல்லிவிட்டு போய்விட்டார்கள் ) நடக்க தொடங்கினால் குறைந்தது இரு இடங்களிலாவது கால் இடறி கீழே விழுந்து, சிரைப்புகளை பெற்ற பிறகு கண்ணுக்கு எட்டியவரை தெரிவது ஒற்றை பாறை. சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் நீள, அகலத்துக்கு குறையாமல் நிற்கும் உயர்ந்த ஒற்றை பாறை. ( இன்னும் மலை முழுங்கி மகாதேவங்களிடம் இருந்து இந்த பாறை தப்பித்திருக்க காரணம் பாதை வசதி இல்லாததுதான் )
அதன் மீது ஏறி சென்றால் கண்களால் பார்த்து நம்ப முடியாத குள்ளர் குகைகள் கொத்து கொத்தாக காட்சியளிக்கும்.
என்னுடைய கணிப்பு என்னவெனில், குகை அமைப்புகள் நிறைந்துள்ள அந்த பகுதி உள்ள வாலியம்பாறை, குகைகள், சுற்றியுள்ள பெரும் பள்ளத்தாக்குகள், எளிதில் யாரும் சென்று விட முடியாத பாதையற்ற நிலை, பாதுகாப்பு மிக்க சூழல் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, அந்த பகுதியின் பாதுகாப்புக்காக இருந்த வீரர்கள் தங்கிய குகைகளாக இருந்திருக்கக்கூடும். வாளியம்பாரையில் உள்ள உயர்ந்த முகட்டில் நின்று பார்த்தால் கிட்டத்தட்ட, பீமன் நீர்வீழ்ச்சி, பரமனந்தல் காடுகள், போளூர் சாலை என பல பகுதிகளை இங்கிருந்தே கண்காணிக்க முடியும். குரங்குகளை தவிர மற்ற விலங்குகள் வாலியம்பாறை மீது எளிதில் வந்துவிட முடியாது. அப்படி ஒரு அமைப்பு. அவசரத்துக்கு குகைக்குள் மூன்று பேர், மூன்று பேராக உட்கார்ர்ந்து கொள்ளமுடியும். மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே வந்து தங்க முடியாதது போல பாறை முகடுகளின் மீது இவை உள்ளன. கிட்டத்தட்ட இதுபோல 200 குகைகள் உள்ளன. எனில் சுமார் 600 பேர் கொண்ட படை வீரர்கள் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கலாம். தங்கள் ஆயுதங்களை வைக்க குகைகளை பயன்படுத்தி இருக்கலாம். குகைகளின் அருகே இன்றும் கிடைக்கும் கல் ஆயுதங்களும் இதற்கு சாட்சியாக உள்ளன.
இதை தவிர வேறு வகையில் யோசித்தால், பொதுவாக நம் கிராமங்களில் இன்றும் காணக்கூடிய ஒரு காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் வீட்டுக்குள் பத்திரமாக இருக்க, குழந்தை குட்டியோடு வீட்டு உரிமையாளர்கள் வெளியே படுத்து உறங்குவார்கள். இன்னும் எளிதில் விளங்க வேண்டுமானால், குருவிகாரர்கள் எனப்படும் நாடோடி இனத்தவர்கள் ஆங்காங்கே ஊருக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து தங்கியிருக்கும் போது, துணிமணிகள், உணவு பொருட்கள், பாத்திரங்கள் எல்லாம் கூடாரத்துக்குள் இருக்கும். ஆனால் இவர்கள் மட்டும் வெட்டவெளியில் படுத்து உறங்குவார்கள். இளம் தம்பதியர் மட்டுமே கூடாரங்களில் உறங்குவார்கள். தவிர நோய்வாய் பட்ட குழந்தைகளும் கூடாரத்துக்குள் இருக்கும். கல் ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கும் வாலியர் கூட்டமும் தங்கள் பொருட்களை இந்த சிறு சிறு குகை அமைப்புகளில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு வெட்ட வெளியில் வாழ்ந்திருக்கலாம். மழை காலங்களில் மட்டும் உள்ளே புழங்கியும், இளம் தம்பதியர் தனித்திருக்கவும், உணவு, உடை, ஆயுதங்களை வைக்கவும் குகைகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம்.
படங்களும் தகவல்களும்: ப்ரகாஷ் சுகுமாரன்
மறுமொழிகள்
5 comments to "ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்"
January 20, 2015 at 8:43 AM
இந்த பதிவு ஒரு விசித்திரமானதாகும். மேலும். உயரட்டும் உங்கள் தேடல்
January 20, 2015 at 8:43 AM
இந்த பதிவு ஒரு விசித்திரமானதாகும். மேலும். உயரட்டும் உங்கள் தேடல்
September 29, 2019 at 10:51 PM
Really intresting to know abt their life style.
October 5, 2021 at 1:36 PM
நான் முதல்முறையாக சென்று பார்த்து வியந்த இயற்கை வளங்கள் அங்கு கொட்டிக்கிடக்கின்றன
February 16, 2024 at 11:33 PM
Very nice gii am also that place
Post a Comment