Saturday, May 30, 2015

வக்கணத்தி முக்கொழுந்து - கொக்கு இளங்குஞ்சு

0 மறுமொழிகள்

சில நாட்களுக்கு முன் கொளஞ்சியப்பர்கோவில், விருத்தாச்சலம் சென்றோம். அங்கு சொத்து தகராறு, வழக்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் பிராது எழுதி சுவாமியிடம் வேண்டிக்கொண்டு  முனியப்பர் சந்நதியிலுள்ள வேல்களிலும் மரத்திலும் கட்டிவிடுகிறார்கள். தீராத வழக்கும் தீரும் என்பது நம்பிக்கை. அந்தச்சந்நதியில் பழமையான் மரமொன்று இருக்கிறது. அது என்ன மரம் என அங்கிருந்தவர்களிடம் வினவினேன். ஒருவர் வக்கை மரமென்றார். அடுத்தவர் வக்கண மரமென்றார். ஒரு பெரியவர் அம்மரத்தின் பெயர் வக்கணத்தி மரமென்று கூறி ஒரு சொலவடையும் கூறினார். அச்சொலவடை கவர்ந்ததால் அவரின் அறிதலைப் பாராட்டி அவரிடம் வேண்டி மறுபடியும் கூறச்சொல்லி அதனைத் துண்டுத்தாளில் எழுதிக்கொண்டேன்.

“வக்கணத்தி முக்கொழுந்து வாகை இளம்பிஞ்சு
கொக்கு இளங்குஞ்சு குறிப்பாகக் கண்டதில்லை”

என்பது அச்சொலவடையாகும். அவரிடம் அதற்குப் பொருள்கேட்டேன். அதற்கு அவர் கூறிய விளக்கம் வருமாறு. மரம்,செடிகளில் பெரும்பாலும் முன்புறம் ஒன்றும் பக்கவாட்டில் இரண்டும் என மூன்று கொழுந்துகளாகவே இலைகள் காணப்படும். ஆனால் குறிப்பிட்ட வக்கணத்தி மரத்தில் முன்புறம் கொழுந்து இலை இல்லாமல் இரண்டுஇரண்டாகக் காணப்படுமென்றார். வாகை மரத்தில் பிஞ்சு,சிறுகாய் இருக்காதாம். காக்கை, கோழி., மற்ற பறவைகளின் குஞ்சுகள் காணலாமாம். ஆனால் கொக்குகளில் இளங்குஞ்சுகள் மாந்தர் கண்களில் தட்டுப்படுவதில்லையாம்.

அவரை வணங்கி விடைபெற்றுக்கொண்டேன். மற்றவற்றைச் சரிபார்த்துக்கொள்ள இயலாவிடினும் வக்கணத்தி மரத்தையும் இலைகளையும் கொழுந்தினையும் புகைப்படமெடுத்துக்கொண்டேன். நண்பர்கள் பார்வைக்கும் கருத்துக்கும் பகிர்ந்துள்ளேன்.

மேலும் இதுபோன்ற இயற்கை சார்ந்த சொலவடைகளை நண்பர்கள் இவ்விழையில் பகிரலாம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்








மறுமொழிகள்

0 comments to "வக்கணத்தி முக்கொழுந்து - கொக்கு இளங்குஞ்சு"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES