அப்போது விஜயநகர மன்னனான வீர கம்பண்ண உடையாருக்குச் செய்தி தெரிய வந்து மீண்டும் அரங்கனை திருவரங்கத்திலேயே கொண்டு சேர்க்கும் எண்ணத்தோடு மறுபடியும் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தான் அழகிய மணவாளன். அந்த ஶ்ரீராமன் பூஜித்த விக்ரஹம் என்பதாலோ என்னவோ அவன் காடு, மேடெல்லாம் சுற்றி அலைந்தாற்போல் இக்ஷ்வாகு குலதனமான இந்த அரங்கனும் காடு, மேடெல்லாம் சுற்றித் திரிந்தான். அரங்கம் வரும் வழியில் அப்போது கண்ணனூர் என அழைக்கப்ப்ட்ட சமயபுரத்தில் கடும்போர் நிகழ்ந்தது. அப்போது அழகிய மணவாளப் பெருமாள் கோபுரப்பட்டி என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமத்தில் அங்கிருந்த ஆதிநாயகப் பெருமாள் கோயிலில் எழுந்தருளி இருந்தார். அதன் பின்னர் முகமதியர்களை வென்ற பின்னர் பரிதாபி வருடம் வைகாசி மாதம் 17 ஆம் நாள் ( கி.பி.1371 ஆம் வருடம்) அழகிய மணவாளம் கிராமத்திலிருந்து கிளம்பி உபய நாச்சியார்களுடன், ஶ்ரீரங்கம் திருக்கோயிலில் மூன்றாம் திருச்சுற்றில் பவித்ரோத்ஸவ மண்டபம் என்னும் சேரனை வென்றான் மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணினார்கள்.
அழகிய மணவாளர் ஶ்ரீரங்கத்தை விட்டுக் கிளம்பியதும் ஶ்ரீரங்கம் கோயிலில் வழிபாடுகள் நின்றுபோய்க் கருவறை திறக்கப்படாமல் சுமார் 60 ஆண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் கோயிலொழுகின்படி இது சுமார் 48 ஆண்டுகள் எனத் தெரிய வருகிறது. இடைப்பட்ட காலத்தில் வழிபாட்டு முறைகள் மாற்றப்பட்டதோடு அல்லாமல், புதிதாக ஒரு அரங்கனையும் செய்வித்து அவரையும் எழுந்தருளப் பண்ணி இருந்தார்கள். ஏற்கெனவே இருந்த அழகிய மணவாளர் ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்ததும், ஒரு சில ஶ்ரீரங்கவாசிகளால் புதிய அரங்கனை விட்டு விட்டு இந்தப் பழைய அரங்கனை ஏற்கும் மனம் வரவில்லை. அவர்கள் எங்களுக்கு இந்தப் புதிய ரங்கன் பழகி விட்டார். இவரே இருக்கட்டும் என்றனர். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டுப் பல உயிர்த்தியாகங்கள் செய்து கொண்டு வரப்பட்ட அரங்கனைத் திருக்கோயிலில் சேர்க்கும் எண்ணமே முதியவர்கள் பலருக்கும் இருந்தது.
ஆகவே அவர்கள் எல்லோரும் சேர்ந்து இவர் தான் பழைய அரங்கர் என்பதை வயது முதிர்ந்தவர்களாலேயே, அதுவும் இவர் எடுத்துச் செல்லப்பட்ட சமயம் இவரை அருகில் இருந்து நெருங்கிப் பார்த்தவர்களாலேயே கண்டுபிடிக்க முடியும் என முடிவு கட்டி அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள், பழைய அரங்கனைப் பார்த்தவர்கள் முன் வந்து இரண்டு அரங்கனின் யார் கோயிலில் இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஶ்ரீராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதுக்கு ஒப்பாக இதை ஶ்ரீரங்க வாசிகள் பேசுகின்றனர்.
இந்தச் செய்தியை நகரெங்கும் முரசறைந்து தெரிவித்தும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் அகப்படவில்லை. கடைசியில் 90 வயது நிரம்பிய ஒரு வண்ணார் அகப்பட்டார். அவருக்கும் கண் பார்வை இல்லாமையால் அரங்கனைப் பார்க்க முடியவில்லை. அனைவரும் திகைக்கையில் அந்த வண்ணாரே ஒரு முடிவைச் சொன்னார். அது தான் இரண்டு அரங்கர்களுக்கும் திருமஞ்சனம் செய்வித்து அந்த ஈர வஸ்திரத்தை அந்த வண்ணாரிடம் கொடுத்தால் அதைப் பிழிந்து கிடைக்கும் அபிஷேக நீரை உட்கொண்டால் பழைய அரங்கனின் பரிமள கஸ்தூரி வாசனையை வைத்துத் தான் கண்டு பிடிக்க முடியும் என்று சொல்கிறார். அப்படியே செய்யப்பட்டது. வண்ணாரும் அழகிய மணவாளத்திலிருந்து வந்த பழைய அழகிய மணவாளரையே நம்பெருமாள் என அடையாளம் காட்டுகிறார். அப்போது தொடங்கி இன்று வரை அழகிய மணவாளர் "நம்பெருமாள்" என்னும் பெயராலேயே அழைக்கப்படுகிறார்.
புதிதாகச் செய்த விக்ரஹத்தையும் ஒதுக்காமல் கருவறையிலேயே "யாக பேரர்" என்னும் பெயரில் பிரதிஷ்டை செய்தார்கள். இப்போதும் யாகங்களில் அவரையே எழுந்தருளச் செய்கின்றனர். அழகிய மணவாள கிராமத்து ஶ்ரீவைணவர்கள் பலரும் அரங்கனுக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள். ஆகவே கோபுரப்பட்டி என்னும் இந்தக் கிராமம் அழகிய மணவாளம் என்னும் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
தகவல் உதவி: இந்து அறநிலையத் துறை, ஶ்ரீரங்க பங்கஜம்
மறுமொழிகள்
2 comments to "அழகிய மணவாளப் பெருமாள், அழகிய மணவாளம் ஊருக்கு வந்த கதை! "
April 4, 2015 at 12:07 AM
படங்கள் எனக்குத் தெரிகின்றன, உங்களுக்கு?
March 3, 2022 at 1:40 PM
Las Vegas Hotel and Casino - MapYRO
Las Vegas Hotel and Casino is located in the heart of downtown Las Vegas. It is 서산 출장마사지 home to the Wynn 당진 출장마사지 Resorts Casino, 용인 출장안마 Wynn Macau Hotel. It is 고양 출장샵 also home to 포천 출장샵 the
Post a Comment