Sunday, July 7, 2013

திருநெல்வாயில் அரத்துறை

0 மறுமொழிகள்

15.06.2013 அன்று விருத்தாசலத்திற்கு 15 மைல் தூரத்திலுள்ள திருவட்டுறை எனும் திருநெல்வாயில் அறத்துறை சென்றோம். அடுத்தடுத்த ஊர்கள் விருத்தாசலமும் திருவட்டுறையும். இரண்டு தலங்களிலும் மூவரும் பாடியுள்ளனர். வழியிலுள்ள  திருத்தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தையும் அவரின் அழகியகாதலியையும் பெண்ணாகடத்தில் தரிசித்த  பின்னர் வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ள திருவட்டுறை செல்லலாம்.


ஆலமரம் தல விருட்சம்.
கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
திருஞானசம்மந்தருக்கு முத்துச்சிவிகையும், சின்னமும், குடையும் அருளிய தலம்.

சுயம்பு மூர்த்தி. துவாரபாலகர்கள் பழமையைக் காட்டுகிறார்கள். கோஷ்டங்களில் அழகிய அர்த்தநாரீசுவரர் சிற்பம், பார்வதியுடன் ஈசுவரர், பிட்சாடணர், துர்க்கை, கூத்தர் திருஉருவங்களும் சண்டிகேசுவரர், வால்மீகி முனி சிற்பங்களும்  அற்புதமானவை.

கரங்களில் மானும் மழுவும் கொஞ்சலுமாக நிற்கும் ஈசுவரர் படம் இணைத்துள்ளேன்.

ஆலமரமும் ஆற்றங்கரையும் அனுபவிக்க வேண்டியவை.

ஓடாத பழைய தேரின் மரச் சிற்பங்கள் திருடுபோயுள்ளன. அதைபற்றிக் கவலைபடாமல் ஸ்டீல் சப்பரம் செய்து தற்போது தேரோட்டம் நடைபெறுகிறது. பக்தி பழமை போற்றலுடன் இணைந்தது என்ற விழிப்புணர்வு பெருக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.
                                       இரண்டாம் திருமுறை - தேவாரம் தளம்
கடும்புனல் நதியை நீ வா என அன்று பெருமான் அடக்கியதால் நீவா நதியென்று புராணப் பெயர். வறண்டு கிடக்கும் ஆற்றை என்று நீ வா என்று பெருகச் செய்யத் திருவுளம் வேண்டும்!

ஆலமர் செல்வர்




பழைய கோவிலைப் புதுப்பிக்கும்போது கோஷ்டங்களில் உள்ள சிற்பங்களைப் பெயர்த்து புதிய அமைப்பில் பதித்துள்ளார்கள்.

தட்சணாமூர்த்தி சிலை கோஷ்டத்தின் நெற்றியில் உள்ள சிற்பம் படம் இணைத்துள்ளேன். வெற்பெடுத்த திருமேனி.




பிட்சாடணர் சிற்பம்



கல்வாய்அகி லுங்கதிர் மாமணியுங்
    கலந்துந்தி வருந்நிவ வின்கரைமேல்
நெல்வாயி லரத்துறை நீடுறையுந்
    நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார்
    நரைத்தார்இறந் தார்என்று நானிலத்தில்
சொல்லாய்க்கழி கின்ற தறிந்தடியேன்
    தொடர்ந்தேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

நம்பியாரூரர் திருவாமாத்தூரிறைவரைப் பணிந்து தொண்டை வளநாடு கடந்து நீர்நாட்டின் அருகில் திருஅரத் துறையை அடைந்து இறைவனைப் பணிந்து பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 ஏயர்கோன் கலிக்காம நாய . புராணம் - 294) குறிப்பு : இத்திருப்பதிகம் , உலகத்தின் நிலையாமையை எடுத்தோதி ; ` அடியேனை அதனினின்றும் உய்யக்கொள்ளுதல் வேண்டும் ` என்று இரந்து , மற்றொரு கண்ணை வேண்டுதல்மேலும் நோக்குடையதாக அருளிச்செய்தது .
                    சுந்தரர் - ஏழாம் திருமுறை -  நன்றி:தேவாரம் தளம்


ஆடல்வல்லான் 

கீழே திருவட்டுறை கோவிலின் அருமையான ஆடல்வல்லான் புடைப்புச் சிற்பம்  படம் இணைத்துள்ளேன். ஊன்றிய காலின் அருகில் பேய் போன்ற உருவின் வரிவடிவம் உள்ளது.



கோயிலின் முகப்புத் தோற்றம்




அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

மறுமொழிகள்

0 comments to "திருநெல்வாயில் அரத்துறை"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES