Monday, November 9, 2015

மகேந்திர வர்மப் பல்லவனின் சத்துருமல்லேஸ்வராலயம்

0 மறுமொழிகள்

சத்துரு மல்லன்...

மகேந்திர வர்மப் பல்லவனின் விருதுப் பெயர்களுள் ஒன்று. இந்தப் பெயராலே தளவானூரில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம்தான் சத்துரு மல்லேஸ்வரம். குடைவரைக் கோயில். பிரம்மாண்டப் பாறையில் வடக்குப் பார்த்த நிலையில் முகமண்டபம் அமைந்துள்ளது. உள்ளே கிழக்குப் பார்த்துள்ள திருநிலையறையில் ஆவுடையார் காட்சியளிக்கிறார்.  இது சற்று சாய்ந்த நிலையில் இருக்கிறது.

அருகிலேயே தட்டு ஒன்றில் குங்குமம், விபூதி தயாராக வைத்துள்ளனர். தரிசனம் செய்யும் பக்தகோடிகள், கையில் இருக்கும் விபூதி குங்குமத்தின் மிச்ச மீதியை வாயிற் காப்போரின் முகங்களில் பூசிவிட்டுச் செல்கின்றனர். இதனால் அந்த அழகிய துவார பாலகர்கள், பூதகணங்களைப் போல் காட்சியளிக்கின்றனர்.


மண்டபத்தின் வெளிப்புறத் தூண்கள் ஒன்றில், பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்ட வடமொழிச் செய்யுள் கீழ்க்காணும் வாசகத்துடன் அமைந்துள்ளது.

“தண்டாநத நரேந்த்ரரேண
நரேந்த்ரனை காரித
ஸத்ருமல்லேண ஸைலேஸ்மின்
ஸத்ருமல்லேஸ்வ ராலய”

தனது போர் வீரர்களால் பகைவரை அடக்கிய நரேந்திரனாகிய சத்துருமல்லன் என்னும் அரசனாலே, இந்த மலையின் மேல் சத்துரு மல்லேஸ்வராலயம் என்னும் கோயில் அமைக்கப்பட்டது, என்பது இக்கல்லெழுத்துச் சாசனத்தின் பொருளாகும்.

இக்குடைவரைக் கோயிலுக்கு மேலே சமணப் படுக்கைகளும் காணப்படுகின்றன.


வரலாற்றுச் சிறப்புவாய்ந்த தளவானூர் குடைவரைக்குச் செல்ல சாலை வசதியேதும் கிடையாது. கோயிலுக்குக் கம்பிவேலி போட்டு, எனாமல் போர்டுகளை வைத்ததுடன் தன்னுடையக் கடமையை நிறுத்திக் கொண்டது தொல்லியல் துறை. சுற்றிலும் இருக்கிற தனியார் நில உரிமையாளர்கள் மனது வைத்தால்தான், அவர்தம் வயல் வரப்புகளினூடாக சத்துருமல்லேஸ்வராலயத்தை நாம் அடைய முடியும்.

இக்குடைவரைக்கு ஒருசில கி.மீ. தூரத்தில்தான், மகேந்திர வர்மனின் முதற் குடைவரையான, மண்டகப்பட்டு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



தளவானூர்:
விழுப்புரம்–செஞ்சி சாலையில் பாலப்பட்டு எனும் இடத்திற்கு முன்னதாக கிழக்கில் 7கி.மீ. பயணிக்க வேண்டும்.  




நன்றி: கோ. செங்குட்டுவன்

மறுமொழிகள்

0 comments to "மகேந்திர வர்மப் பல்லவனின் சத்துருமல்லேஸ்வராலயம்"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES