Sunday, July 31, 2011

பெண்ணை ஆற்றங்கரை நடுகல் கோயில்கள்

2 மறுமொழிகள்

இந்த நடுகற்களில் பெரும்பாலானவற்றில் உள்ள எழுத்துக்கள் இன்னும் முழுமையாக படிக்கப்படவில்லை. அவற்றின் காலங்களை கணிப்பதிலும் பல முரண்பாடுகள்.
களிமண்ணால் செய்யப்பட்ட உருவங்கள் தொண்டமாநூர் காணித்தா கோயில் அருகே கிடைத்தன. இவற்றின் உடல் பகுதிகள் சிதைந்து குப்பைகள் போல உள்ளது. கிடைத்த தலைகளை கவனிக்கும் போது ஒவோவ்வொரு முக அமைப்பும் வேறுபடுகிறது. கூறிய மூக்கு, நீண்ட மூக்கு, தட்டையான மூக்கு, குண்டு மூக்கு என வித்தியாசங்கள் தெரிகின்றன. காதுகளின் அமைப்பிலும், அணிகலன்களிலும் பல வித்தியாசங்கள். தலை பாகை வைத்தும், மொட்டையாகவும், ஜடா முடியுடனும், கூந்தலுடனும் உள்ளன. சில ஐரோப்பிய, சீன முக அமைப்பு கொண்டதாகவும் தெரிகிறது.

இது பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தங்கி, ஆன்ம விவாதங்களை செய்துள்ளதை தெரிவிப்பதாக உள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் ஒரு சிறு குன்றின் அடிவாரத்தில் பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நடுகல் கோவில் அருகிலேயே கற்படுக்கைகளுடன் மூன்று அறைகள் கொண்ட குகை பாறையில் குடையப்பட்டு உள்ளது. ஆற்றங்கரையில் பல இடங்களில் சிறு சிறு கோவில்கள் மற்றும் குகைகள் காணப்படுகின்றன.

நடுகற்களில் படைக்கப்பட்டுள்ள உருவங்கள் நீண்ட தலை முடியுடன் உள்ளன. சிலவற்றில் தலைபாகை காணப்படுகின்றது. பெரும்பாலும் கூறியதாக உள்ள மூக்கின் அமைப்பில் சிலவற்றில் மட்டும் மாற்றம் தெரிகிறது. வீரர்களின் தலைக்கு மேல் செய்யப்பட்டுள்ள அலங்காரங்களை கொண்டு அவனது செல்வதை அறியமுடியும். பெரும்பாலும் ஒரு கையில் வில்லுடன், மறுகையில் குருவாளுடனும் வேட்டைக்கு தயாரான நிலையில் உள்ளன. ஒட்டிய வயிறும், திண்மையான புஜமும் அவர்கள் இளமையானவர்கள் என்பதை தெரிவிக்கின்றன.

இது குறித்து நந்தி மலை முதல் கடலூர் வரை பெண்ணை ஆற்றின் இரு கரைகளில் உள்ள கிராமங்களில் உள்ள கோயில்கள், நடுகற்கள், மக்களின் சாதி அமைப்புகள், சமய சடங்குகள் ஆகியவற்றை கடந்த 14 வருடங்களாக பதிவு செய்து வரும் பழனிவேள் என்ற ஆய்வாளர்,
சண்டைகள் அல்லது வேட்டைகளின் பொது இறந்தவர்களுக்கே நடுகற்கள் வைத்து வணங்கும் வழக்கம் உள்ளதாகவும். அது ஒரு தனி நபருக்கான நடுகல் என்பதை விட ஒரு தலைகட்டை சேர்ந்த தலைவனுடன் இறந்த பல வீரர்களுக்கான நடுகல் என்கிறார். மேலும் இந்த வீரர்கள் எல்லாம் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதற்க்கு மேல் அவர்கள் வாத்தியாராக ( மற்ற இல வயதினருக்கு வேட்டை உள்ளிட்ட வாழ்வியல் தேவைகளை சொல்லி கொடுப்பவராக ) மாறி ஆற்றின் கீழ் கரைக்கு சென்று விடுவார்கள் தெரிவிக்கின்றார்.தவிர நடுகற்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் எல்லாம் போர்கள் நடந்ததற்கான அடையாளம் என்பதை விட, ஆநிரை கவர்தல் அல்லது மீட்டல், பெண்களை கவர்தல் அல்லது மீட்டல் போன்ற உள்ளூர் மக்களின் தேவைகளுக்காக நடந்த சண்டைகளில் இறந்தவர்களுக்கு வைக்கப்பட்டவை. காதலுக்காக உயிர் நீத்தவர்களும், வேட்டையின் போது உயிரை விட்டவர்களும் கூட இதில் அடக்கம், என்கிறார்.தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் என பல குலத்தினர் ஆண்டு வந்தாலும் சமூக கட்டமைப்பு கீழிருந்து மேலாக பரவி சீரானதாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை இந்த நடுகற்கள் தெரிவிக்கின்றன. எங்கேயோ மதுரையிலும், காஞ்சியிலும் இருந்து கொண்டு நாட்டை ஆண்ட மன்னர்களுக்கும், இங்கே ஆடு, மாடுகளுக்காகவும், பெண்களுக்காகவும் நடைபெறும் சண்டைகளுக்கும் அதிக நெருக்கம் இருந்திருக்க முடியாது. எனவே கேட்பாரற்று காடுகளிலும், மலைகளிலும், ஆறுகளிலும் கிடக்கும் நடுகற்களை ஆராய்ந்தால் மறைந்து கிடக்கும் பல வரலாறுகளை வாசிக்க முடியும்.

தவிர ஆங்காங்கே கிடைக்கும் இது போன்ற பதிவுகளை வரலாற்று சின்னங்களாக கருதி, அவற்றில் இருக்கும் செய்திகளை தனி தனியாக பதிவு செய்வதை விட, அவை கிடைக்கும் பகுதிகளில் வாழும் மக்களின் கலாசாரத்தையும், சடங்குகளையும், வாழ்வியல தேவைகளையும், வாய்ப்புகளையும் இணைத்து படித்தால் உயிரோட்டமாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் உண்மையான தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க முடியும் என்பது என் கருத்து.


நடுகற்கள் குறித்து நீண்ட ஆய்வு மேற்கொண்டுள்ள பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களில் எங்காவது, யாராவது வேடியப்பன், வேடிச்சி என்ற பெயரை கொண்டிருந்தாலோ அல்லது அந்த பெயரில் வியாபார நிறுவனங்களை நடத்தி வந்தாலோ, வேடியப்பன் சாமியை குல தெய்வமாக கொண்டிருந்தாலோ, அவரிடம் தைரியமாக உங்கள் பூர்வீகம் திருவண்ணாமலையா என கேட்கலாம். நிச்சயம் ஆம் என்ற பதிலே வரும். இதையே விழுப்புரம் பகுதியில் முனியப்பன் என்றும் வேலூர் பக்கம் ஐயனார் என்றும் வழங்கப்படுவதாக தெரிவிக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டங்களில் இவை மாரியப்பன் என்ற பெயரில் வழங்குவதாகவும், கோவில் பட்டி தாலுகாவை ஒட்டியுள்ள கழுகு மலை என்ற கிராமத்தில் மொத்தமுள்ள சுமார் ஆயிரத்து ஐநூறு குடும்பங்களை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆண்களாக இருந்தால் மாரியப்பன் அல்லது மாரிசாமி என்றும் பெண்களாக இருந்தால் மாரிமுத்து, மாரியாத்தா என்றும் பெயர்கள் சூட்டப்படும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, பிள்ளைகள் என அணிவருக்குமே மாரிமுத்து, மாரியப்பன் என பெயர் இருக்கும் விசித்திரம் இன்றும் காலா காலமாக தொடர்கிறது.

இதேபோல திருவண்ணாமலை அருகே உள்ள மஞ்சம்பூண்டி என்ற கிராமத்தில் உள்ள அனைவருமே சோலையப்பன், சோலையம்மா என்ற பெயர்களில் மட்டுமே கூப்பிடப்படுகின்றனர். அங்கு சென்று சோலை வீடு எது என கேட்டால் நம்மை விசித்திரமாக பார்கிறார்கள். எந்த வீட்டு சோலய கேக்கிறீங்க.. ஒன்ன பாத்தா படிச்சாப்புல தெரீது.. அப்ப மேலதெரு கீழூட்டு மொத மவன் சோலயா.. இல்ல மூணாந்தெரு நொண்டி சோல மவளா.. என கேட்டு தலை சுற்ற வைக்கிறார்கள்.

-ப்ரகாஷ் சுகுமாரன்

மறுமொழிகள்

2 comments to "பெண்ணை ஆற்றங்கரை நடுகல் கோயில்கள்"

ramalingam india said...
November 20, 2013 at 5:10 AM

thanks for info iam interested on this kind of news my birth place is cuddalore ot.i am living in Chennai.i traveled many villages in cuddalore district.naduveerapattu cn palayam punrutti Chidambaram kattu mannar kovil are some old towns in brittish rool.we can see many hero stones in different kinds.ramalingamashoknagar@gmail.com

ramalingam india said...
November 20, 2013 at 5:27 AM

I saw a hero stone nadukal in v.salai village near vikravandi .in that stone a hero with a dog clearly visible.you can refer this in wikimapia half k.m.east side to the anjaneyar statu in N H 45 of v.salai that hero stone photo uploaded by me.

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES