Thursday, May 15, 2014

திருமாலிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன்!

0 மறுமொழிகள்

திருமாலிருஞ்சோலை வஞ்சக்கள்வன் மாமாயன்!
செஞ்சொற் கவிகாள்! உயிர்காத்து ஆள்
  செய்ம்மின்! திருமாலிருஞ்சோலை
வஞ்சக்கள்வன் மாமாயன்
  மாயக்கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து
  நின்றார்; ஆர் அறியா வண்ணம் என்
 நெஞ்சும் உயிரும் அவைகண்டு
 தானே ஆகி நிறைந்தானே!

வஞ்சக்கள்வன் இன்று வைகை ஆற்றில் இறங்குகிறார்.  முன்னெல்லாம் முதல் நாள் மூணு மாவடியில் எதிர்சேவை பார்த்துட்டு அழகரோடயே வந்து அப்பாவின் நண்பரின் மண்டகப்படியிலும் கிட்ட இருந்து பார்த்துட்டு, அங்கே இருந்து ஓலைப் பெட்டியில் புளியஞ்சாதம், சர்க்கரைப் பொங்கல் கட்டி எடுத்துக் கொண்டு கீழ்ப்பாலத்தோடு பொடி நடையாய் வீட்டுக்குப் போவோம்.  நடப்பது அப்போதெல்லாம்  பெரிய விஷயமாய்த் தெரியலை. பல நாட்கள் மேலாவணி மூல வீதியில் இருந்து எங்க பள்ளிக்குக் கீழ்ப்பாலம் வழியாக நடந்தே போயிருக்கேன்.  ஆகவே பழகின வழி தான்.


அழகர் ஆற்றில் இறங்கற அன்னிக்குக் காலம்பர எல்லோர் வீட்டிலேயும் சீக்கிரமாவே எழுந்துடுவாங்க.  அம்மாக்கள் எல்லாம் குளிச்சு முடிச்சு அநேகமாப் பாதி சமையலும் பண்ணி வைச்சுடுவாங்க.  எல்லோருமாய் ஒரு குழுவாய் அழகரைக் காணக் கிளம்புவோம்.  ஆறு, ஆறரைக்குக் கிளம்பினால் ஏழரைக்குள்ளாக சரியா அழகர் ஆற்றில் இறங்கும் நேரத்துக்கு நாமளும் போயிடலாம்.  கூட்டம் எல்லாம் முதல் நாளில் இருந்தே வைகையிலும், கரையிலும், மண்டகப்படிகளிலும் தங்குமாகையால் தெருக்களில் கூட்டம் அவ்வளவா இருக்காது.  கீழ்ப்பாலம் (கல்பாலம்) கிட்டேத் தான் கூட்டமே ஆரம்பிக்கும்.

வஞ்சக்கள்வன், மாமாயனின் அழகு மக்கள் மனதைக் கொள்ளை கொண்டதால் கள்ளழகர் என்ற பெயர் ஏற்பட்டதாம்.  மூலவர் பெயர் பரமசாமி. உற்சவர் தான் சுந்தரராஜப்பெருமாள் என்னும் அழகர். கள்ளழகர் கோலத்தில் கையில் கன்னக்கோலுடன் கறுப்புச் சல்லடம் கட்டிக் கொண்டு கொண்டை போட்டுக் கொண்டு வரும் அழகரைப் பார்த்தால் நிச்சயம் மயங்கி விடுவீர்கள்.முகத்தின் அந்தப்புன்சிரிப்பு, குறும்பு கொப்பளிக்கும். நானும் உங்களில் ஒருவன் என்று சொல்லாமல் சொல்கிறார் அழகர்.  இன்னிக்கு இத்தனை நேரம் ஆத்தில் இறங்கி இருப்பார்.  என்ன உடை உடுத்தி வந்தார்னு இனிமேல் தான்பார்க்கணும்.

 Inline image 1

உண்மையில் மண்டூக ரிஷிக்கு சாபவிமோசனம் தருவது தான் அழகர் மதுரைக்கு வருவதன் முக்கிய கட்டம்.  ஆனால் காலப்போக்கில் அழகர் ஆத்தில் இறங்குவதை மீனாக்ஷி கல்யாணத்தோடு தொடர்பு கொண்டு கதைகள் கிளம்பி இருக்கின்றன.  இதே மண்டூக ரிஷியின் சாப விமோசனம் நிகழ்ச்சி ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அருகிலுள்ள இன்னொரு மலைக்கோயிலிலும் நடைபெறுகிறது.  அங்கே தான் ஆரம்பத்தில் நடைபெற்றதாகவும், பின்னர் அழகரோடு இதை இணைத்ததாகவும் அந்த ஊர்க்காரங்க கூறுகிறார்கள்.  அந்த மலையின் பெயர் மறந்துவிட்டது.  ஆனால் பெருமாள் அங்கேயும் சுந்தரராஜப் பெருமாள் தான்.  மலை உச்சிக்குப் போவது இன்னமும் கொஞ்சம் கடினமாய்த் தான் இருக்கிறது என்று தெரியவருகிறது. அங்கேயும் நூபுர கங்கை இருக்கிறாள்.  நானே இந்த ஊரைப்பத்தி ஒரு பதிவில் எழுதினேன்.  ஊர்ப் பெயர் மறந்துவிட்டதால் பதிவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்னிக்கு இங்கே அம்மாமண்டபத்துக்கு நம்பெருமாள் வந்துட்டு இருக்கார். காவிரிக்கரையில் கஜேந்திர மோக்ஷம் இன்னிக்கு நடைபெறும்.  ஆண்டாள் இப்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.  இன்னிக்கு வருமானு தெரலை.  ஹிஹி, இதை எழுதும்போதே ரங்க்ஸ் பெருமாள் எதிரிலுள்ள மண்டகப்படிக்கு வந்துட்டதாக அழைப்பு விடுத்தார். கீழே போனேன்.  ஆண்டாளைக் காணோம். :(   பெருமாள் மட்டும் இன்னிக்கு ஶ்ரீபாதம் தாங்கிகளால் தாங்கப்பட்டு வெயிலுக்குத் திரை போட்டு அழைத்து வரப் பட்டார்.  சுடச் சுடப் படம் கீழே!
வழக்கமா வர பல்லக்கு தோளுக்கு இனியான் என எண்ணுகிறேன்.  அதிலே வரலை.  கிட்டப்போக முடியாமல் விரட்டி விடறாங்க.  ஓரளவு தொலைவில் இருந்து தான் எடுக்க முடிந்தது.  இன்னிக்கு ரொம்ப சிம்பிள் அலங்காரம்.  பெருமாளுக்கு அருகிலிருக்கும் திரை வெண்பட்டுத் திரை தான் வெயில் படாமல் பாதுகாக்க.  கிழக்கே பிடித்திருக்கின்றனர். 

மறுமொழிகள்

0 comments to "திருமாலிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன்! "

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES