Friday, July 19, 2013

உலத்தி.. (கூந்தற்பனை)

0 மறுமொழிகள்

சாந்தி மாரியப்பன்

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தோரணங்களுடன், வாசலில் குலையுடன் கூடிய வாழைமரம் போன்றவற்றைக் கட்டி வைத்து அலங்கரிப்பது வழக்கம். அதிலும் திருமணங்களில் கூடுதல் அலங்காரமாக செவ்விளநீர்க்குலைகளையும் வாசலில் கட்டி வைப்பார்கள். சில காலம் முன்பு வரைக்கும் திருமணங்களை வீட்டில், முற்றத்திலோ அல்லது வீட்டின் முபக்கத்திலோ, அருகிலோ இருக்கும் மைதானங்களில் தென்னையோலைக் கிடுகுகளால்(பின்னப்பட்ட ஓலைகள்) ஆன பந்தலிட்டு நடத்துவது வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் பந்தலைத் தாங்குவதற்காக ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கும் மூங்கில் கம்புகளில் அலங்காரமாக வித்தியாசமான பச்சை ஓலைகளையும் செருகியிருப்பார்கள். மீன் வால் மாதிரியும் சிறகுகள் மாதிரியும் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருக்கும் அந்த ஓலைகள் கூந்தல் பனை என்றும் உலத்தி என்றும் அழைக்கப்படும் மரத்தினுடையவையே.

கூடுதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வாசல் அலங்காரத்தில் கூந்தல் பனையின் கூந்தலையும் கட்டி வைப்பார்கள். ஒரு கூந்தலை இரண்டாக வெட்டி இரண்டு பக்கமும் கட்டுவது வழக்கம். "என்னது!!.. கூந்தலா?" என்றுதானே நினைக்கிறீர்கள்.பச்சைப்பட்டாணிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் நீளமான சாட்டைகளைச் சேர்த்துக் கட்டியதுபோல் காட்சியளிக்கும் பூங்கொத்தைத்தான் கூந்தல் என்று சொல்லுவோம். சிறுசிறு அரும்புகள் போன்று காட்சியளிக்கும் பூக்கள் முதிர்ந்து பட்டாணியளவில் சின்னஞ்சிறு காய்கள் ஒட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும். இப்பருவத்தில் ஒரு கூந்தலின் விலை இரண்டாயிரம் வரைக்கும் போகுமாம். கல்யாண வீடுகளில் முஹூர்த்தம் முடியும்வரைக்கும் கூடக் காத்திருக்காத பொறுமையிழந்த குழந்தைகள், இந்தச்சாட்டைகளை அறுத்து வைத்துக்கொண்டு மனம்போல் விளையாடுவதுண்டு.


கன்னியாகுமரி மாவட்டத்தில் 'உலத்தி' என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மரம் மற்ற இடங்களில் கூந்தற்பனை என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Caryota urens.  'யா மரம்' என்று குறுந்தொகையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மரத்தின் இலைகளும் தண்டும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ். லத்தீன்  மொழியில் urens என்ற பெயருக்கு 'அரிக்கும் தன்மையுடையது' என்ற அர்த்தமுண்டு. பெயருக்கேற்றாற்போல் கூந்தலில் இருக்கும் காய்களை வெகு நேரம் கையாண்டால் லேசான அரிப்பு ஏற்படும்.(இதிலிருக்கும் ஆக்சிலிக் ஆசிட்டின் காரணமாகவே அரிப்பு ஏற்படுகிறதென்று அறிவியல் சொல்கிறது.) இதற்காகவே சிறுவயதில் நாங்கள் இதை வைத்து விளையாடும்போது பெரியவர்கள் எச்சரித்த நினைவிருக்கிறது.

இம்மரத்தைப் பார்க்கும்போது, குளித்து முடித்த பின் ஒரு பெண் தன் கூந்தலை விரித்து உலர்த்திக்கொண்டிருப்பது போலவும், பூங்கொத்துகள் நீளமான கூந்தலைப்போலவும் தோன்றுவதால் கூந்தற்பனை, மற்றும் உலத்தி என்ற பெயர்கள் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. பனைவகையைச் சேர்ந்த இம்மரங்கள் சுமார் 15 மீ. வரை வளரக்கூடியது. வழவழப்பான, உருண்டையான இதன் தண்டுப்பகுதி சுமார் 30 செ.மீ விட்டமுடையதானதாக இருக்கும். உதிர்ந்த இலைகள் இதன் உடலில் விட்டுச்செல்லும் தடங்கள் பார்ப்பதற்கு வளையங்களைப் பதித்தது போலவே இருக்கும்.  கூந்தற்பனை (இலங்கை வழக்கில் கித்தூள்) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர்,மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவரஇனமாகும்.பொதுவாகவே பனைக்குடும்ப வகையைச் சேர்ந்த மரங்களிலிருந்து பதநீர் இறக்கப்படுவதும், அது காய்ச்சப்பட்டு வெல்லம் தயாரிக்கப்படுவதும் உண்டு. இதற்கு கூந்தற்பனைமரமும் விதி விலக்கல்ல. இதிலிருந்து இறக்கப்படும் நீர் 'கித்தூள் பானி' என்று அழைக்கப்படுகிறது. இளநீர், பதநீர் என்று அழைக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட மரங்களை இளநீர் மரம் என்றோ பதநீர் மரம் என்றோ நாம் அழைப்பதில்லை. மாறாக தென்னை, பனை என்று அழைக்கிறோம். ஆனால், கூந்தற்பனையிலிருந்து பெறப்படும் நீர் 'கித்தூள்' எனப்படுவதால் கித்தூள் மரமென்று அழைக்கப்படும் பெருமை இம்மரத்திற்கு மட்டுமே உண்டு. ஆமாம்,..இலங்கையில் இந்த மரத்தைக் கித்தூள் மரமென்றுதான் அழைக்கிறார்கள் :-)) சமையலில் வழக்கமான வெல்லத்திற்குப் பதிலாக இதைப்பயன்படுத்தி இனிப்புகள் செய்யலாம்.இதன் அழகான கூந்தலுக்காகவும் இலையின் அழகுக்காகவும் இது வீட்டின் உள் மற்றும் வெளி அலங்காரத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது. ஓரளவு வளரும்வரை தொட்டிகளில் க்ரோட்டன்ஸ்களைப்போல் வீட்டுக்குள் வளர்த்துவிட்டு பின் வெளித்தோட்டத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். நவிமும்பையில் சில பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் தொட்டிகளிலும் அழகுக்காக வளர்க்கப்படுவதுண்டு. இரண்டு மீட்டர் உயரத்திற்கு வளர்ந்ததுமே சின்னதாகப் பாளை விட்டு அரையடிக்கூந்தலை விரித்துப்போட்டுக்கொண்டு நிற்கும் சின்னஞ்சிறு உலத்திகளைப் பார்க்கும்போது 'பாப்'வெட்டிக்கொண்ட எலிக்கேஜி குழந்தையைப் போலிருக்கும்.

தென்னை மற்றும் பனை மரங்களைப்போலவே இதிலும் ஒவ்வொரு மடலுக்கும் ஒரு பாளை வரும். அந்தப்பாளை வெடித்து வரும்போது கூந்தலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்து இறுதியில் ஒன்பதடிக்கூந்தலை உலர்த்திக்கொண்டு கம்பீரமாக நிற்பாள் இந்தக் கூந்தலழகி. தனிமரம் தோப்பாகாதுதான். ஆனால், நன்கு செழித்து வளர்ந்த ஒரே ஒரு கூந்தற்பனை கிட்டத்தட்ட தோப்பையே வளர்க்கும் தோற்றத்தைக் கொடுக்கும். ஒரு கூந்தற்பனையை வீட்டு முன் தோட்டத்தில் வளர்த்தாலே போதும்.. வீட்டுக்கே ஒரு தனியழகு வந்தது போலிருக்கும். வீட்டின் முன் அலங்கரித்த தேரை நிறுத்தியிருப்பது போன்றதான, யானையைக் கட்டிப்போட்டு வளர்ப்பது மாதிரியான அழகு அது.

மறுமொழிகள்

0 comments to "உலத்தி.. (கூந்தற்பனை)"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES