Sunday, December 30, 2012

தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் உலகும்..... நாமும்

2 மறுமொழிகள்


துரை.ந.உ


மாலை மணி 5.

”துரைசார்.. நாளைக்குக் காலைல ஒரு மீட்டிங், கண்டிப்பாக வந்திருங்க .. முக்கியமான ஆள்ல்லாம் வாராங்க  “
கோவையில் தொழில்முறை சந்திப்பு ..முதல்நாள் மாலையில்தான் முடிவானது ..  தூத்துக்குடியில் இருந்து அதிகாலையில் கிளம்பினால் தான்.. 400 கிமீ கடந்து ...11மணிக்குள் வந்து கலந்துகொள்ள முடியும் ..

12 மணிக்கு வேலையை முடித்து , சாப்பிட்டு , தொலைக்காட்சியில் செய்திபார்த்து படுக்கைக்குச் செல்லும்போது மணி (வழக்கம் போலவே)  இரவு 1.. தூங்கத் தொடங்கும் முன்னரே அலாரம் அடிக்க..பதறி எழுந்து குளித்து ....திட்டமிட்ட நேரத்தில் வண்டியைக் கிளப்பியாகி விட்டது ...

காலை  மணி 10...தாராபுரம் தாண்டி அரைமணி நேரம் ஆகி இருக்கும் .. வண்டியை நிறுத்தி ஒரு 5 நிமிடத்தில் முகம் கழுவி , சட்டை மாற்றிக் கிளம்ப நினைத்த நேரத்தில் பளீரென்று கண்ணைப் பறித்தது ஒரு காட்சி ... சாலையிலிருந்து உட்பக்கமாய்த் திரும்பும் ஒரு கிளை மண்பாதையில் பளபளவென்று தனிச் சிகப்பாய் , பச்சை சிவப்பு, மஞ்சள் சிவப்பு கலந்த கலவையாய் ஆப்பிள் அளவிலான தக்காளிகள்... சாலையோரத்தில் குவியல் குவியலாய்க் கொட்டிவைக்கப் பட்டிருந்தன ...

எச்சில் ஊற , கைகள் பரபரக்க ...சுற்றிலும் பார்த்தேன் .. ஒருவரும் இல்லை .. உள்ப்பக்கத்தில் இருக்கும் தோட்ட்த்தில் இருந்து அறுவடை செய்து, தலைச் சுமையாய் இங்கே கொண்டுவந்து சேர்த்து, மொத்தமாக எடுத்து சந்தைக்குக் கொண்டு செல்வார்கள் போல ....

காத்திருந்தேன் ... வண்டியில் அலைபேசி அழைக்க ...
“இன்னும் அரை மணியில் அங்கிருப்பேன் .. சாப்பாடு இப்போ வேண்டாம் “ – தக்காளி இங்கே காத்திருக்கிறது :)
“சரியான நேரத்தில் தொடங்கி விடுங்கள் .. காத்திருக்க வேண்டாம்..”
பேசிக்கொண்டிருக்கையில்தான் கவனித்தேன் ... அங்கே தக்காளியின் அருகே ஒரு பெரியவர் ...

பேச்சைத் துண்டித்துவிட்டு ..காமிராவோடு அவரிடம் ஓடினேன்
”ஐயா ... பழம் உங்களுடையாதா ?”
ஆமென்று தலையாட்டினார் ...
“ஒரு படம் எடுத்துக்கவா ?”
இப்போதும் தலையாட்டினார்.. ‘சரீங்கிறாரோ?’
“கொஞ்சம் பழத்துக்கு நடுவுல நிக்கிறீங்களா”
என்னைத்திரும்பிப் பார்த்தார் .. மெல்ல நகர்ந்து தள்ளிச் சென்று ஒரு கல்லில் குத்துக்காலிட்டு அமர்ந்தார் ...குனிந்து கொண்டார் ..
‘ஒருவேளை..காது கேளாமல், வாய் பேசமுடியாதவராக இருப்பாரோ?’

வழக்கமாக... இதுபோன்று... சாலையோரத்தில் கதிர்பரப்பிப் போரடிக்கும் உழவர்கள்/கிராம மனிதர்களிடம் போய் ‘படம் எடுக்’க வேண்டுமென நான் கேட்கும் பொழுது ..அவர்களிடம் உற்சாகம் கொப்பளிக்கும்... மிக ஆர்வத்துடன் கிண்டலும் கேலியுமாக விதம்விதமாய் ‘போஸ்’ கொடுத்து... மிக அற்புதத் தருணமாய் நகரும் அந்த வேளை ..

இங்கே ஏதோ மாற்றமாய் உணர்ந்தேன் ...புரியவில்லை எனக்கு ...
அவர் இல்லாமல் பழங்களை மட்டும் சிலபலக் கோணங்களில் படம் எடுத்தேன்..“ஐயா ..ரெண்டு பழம் தருவீங்களா?”
இதழோரத்தில் லேசான அசைவு ... பழக்குவியலைப் பார்த்து கையசைத்தார் ... ‘எடுத்துக்கோன்னு சொல்கிறாரா !’

சரியாகப் புரியவில்லை என்றாலும்..எடுத்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் ..:) (எனக்குத் தெரியும்.. நான் தான் வழியெல்லாம் நின்று ..கூசாமல் வாங்குவேனேJ ) என்ற நம்பிக்கையில் ஒரு 4 பழம் எடுக்க, அலைபேசியில் அழைப்பு ..
“ரொம்ப நன்றிங்க ஐயா”  சொல்லிக் கொண்டே ஓடி ..வண்டியேறிப் பறந்தேன்..

10 நாட்களுக்குப் பிறகு
அதே மாலை மணி 5.
”துரைசார்.. நாளைக்குக் காலைல ஒரு மீட்டிங், கண்டிப்பாக வந்திருங்க .. முக்கியமான ஆள்ல்லாம் வாராங்க  “

அதே போலக் கிளம்பி அதேபோல 10 மணிக்கு தாராபுரம் தாண்டி அரைமணி நேரம் ஆகி இருக்கும் ..அனிச்சையாக கண்கள் சாலையின் ஓரத்தில் இருந்த அந்த பாதைக்குள் செல்ல ...  நான் சொல்லாமலேயே வண்டி ஆணியடித்தாற்போல நின்றது ..

அதே இடத்தில் ..அதே பழங்கள்..ஆனால்...அழுகிப்போய்........‘ஏன்...என்னாச்சு...’ உள்ளம் பதற ... ’யாரைக் கேட்க’ சுற்றிலும் தேட , தொலைவில் போய்க் கொண்டிருந்தார் அவர்.... அவரேதான்
“ஐயா......ஐய்ய்ய்யாஆஆஆ..” நான் கத்தினேன் ..அவர் கவனித்துவிட்டர்ர் போல ...  நின்றார்.. திரும்பிப் பார்த்து..ஒரு நிமிடம் தாமதித்து...பின் மீண்டும் குனிந்தபடியே செல்லத் துவங்கினார் ...
“ஏன்..ஏன்... பதில் சொல்லாமல் போகிறார்? ஏன் இப்படி ஆனது “? தலை வெடித்துவிடும் போல இருந்த்து ..”யாராவது வரமாட்டார்களா??’

காத்திருந்தேன்... திட்டிரென்று அலைபேசி அழைக்க ...
’அட...இது வேற.. நேரங்காலம் தெரியாம ’
வண்டிக்குள் தூக்கி எறிந்தேன்..

பின்னால் பெல்லடிக்க ..சைக்கிள்.. பள்ளிக்கூடம் போகிறான் போல...
கப்பென்று பிடித்து இறக்கி.. “தம்பி ..இது ஏன் இப்படி இங்கே கெடக்குது !?”
“அதுவா..அறுவடை அன்னிக்கு மார்க்கெட்டுல வெலை எறங்கிப்போச்சுது..அதான்”
“அதுக்கென்னப்பா..ரெண்டு நாள் கழிச்சு விக்க வேண்டியது தானே”
“ஒரு வாரமா கிலோ 2 ரூவாக்குத்தான் கேக்காங்களாம் .. வெலை ஏறல ... அங்க அள்ளிக் கொண்டுபோறக் காசுகூடக் கெடைக்காதாம்”

கடவுளே ....

”தம்பி..ஆடு மாடுக்காவது போடலாமுல்ல”
” அங்க அள்ளிக் கொண்டுபோகதுக்கும் சம்பளம் கொடுக்கணுமே... ..தாத்தாக்கிட்டே ஒன்னும் இல்லையாம்”

உழுது , விதைத்து , நீர்பாய்ச்சி, களையெடுத்து , தளிர் நிறுத்தி, தடவித் தடவி வளர்த்து, பூப்பார்த்து மகிழ்ந்து, ஒவ்வொரு காயாகப் வலிக்காமல் பறித்து , தடவித் தடவிக் கூடையில் அடுக்கி, மெதுவாக வரப்பில் இறக்கி , ஒன்றாகச் சேர்த்து, உழைப்பின் பலன்பெற ...பெருமையுடன் காத்திருந்து , கடைசியில் ஏமாந்த  அந்த தாத்தாவின் அன்றைய சுருங்கிய முகம் இப்போது மனதுக்குள் வந்து நிழலாட...

ஈரக்குலை அறுந்த்து எனக்கு

”” “ யோவ் .. நீயெல்லாம் எதுக்கு” ’’ மேல் நோக்கி ..’ஓ’வெனப் பெருங்குரலெடுத்துக் கத்தவேண்டுமெனத் தோன்றியது . எத்தகைய உலகத்தில் வாழ்த்து கொண்டிருக்கிறோம். ...

விலை வைப்பவனும் , இடைத்தரகனும் , மனது வைக்காவிட்டால்
வானம் பொழிந்தும் , பூமி விளைந்தும் , விளைவித்தவன் பசியில் தான் கிடக்க வேண்டுமா ? விளை பொருளெல்லாம் அழுகித் தெருவில் அழியத்தான் வேண்டுமா ???

மணி 12 தாண்டியிருக்கும்...
வண்டிக்குள்ளிருந்த  அலைபேசி தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருக்க ...

நான் எனோ அங்கேயே  நின்று கொண்டே இருக்கிறேன் ...:((


கடைசியாய் இந்த உலகினை வாழ்த்தி என்குறள் இரண்டு

வான்பொழிந்தும் மண்விளைந்தும் கையேந்தும் வாழ்வுதந்து
செய்தோம் உழவுக்(கு) உயர்வு............................................................ 01

வாழும் வழியின்றி தாழ்ந்தழிந்து வீழும்
உழவனைக் கொல்லும் உலகு............................................................. 02

மறுமொழிகள்

2 comments to "தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் உலகும்..... நாமும்"

Unknown said...
December 31, 2012 at 9:19 AM

மனம் கனக்க வைத்த பதிவு

koothanalluran said...
January 1, 2013 at 5:17 AM

என்ன செய்யலாம் ? ஒரு கற்பழிப்பிற்கு நாடே கொந்தளிக்கிறது. இங்கே நாம் விவசாயத்தை கற்பழித்துக் கொண்டுள்ளோம்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES