Wednesday, April 13, 2011

ஒரு பயணத்தின் முடிவில்.... ஒரு தொடக்கம் !

0 மறுமொழிகள்

கட்டுரையாளர்: துரை.ந.உ

தூத்துக்குடி.....

மூன்றுபக்கமும் தொழிற்சாலைகளாலும் , ஒருபக்கம் துறைமுகத்தாலும் சூழப்பட்ட தொழில் நகரம் ....’மால்கள் , காம்ப்ளக்ஸ்கள்’ என அல்ட்ராமாடர்ன் சிட்டியாக மாறிக்கொண்டிருக்கும் நகரம் ...

வெளியூர் சுற்றுப்பயணம் முடித்து காலையில்தான் வீடு வந்து சேர்ந்திருந்தேன். அம்மா ஒரு திருமண அழைப்பிதழோடு வந்தார் .

“தம்பி ..(என்னை தம்பி என்றுதான் அழைப்பார் ) ...ஒரு முக்கியமான கல்யாணம் ... போயிட்டு வந்திரலாம்” என்றார் .

எனக்கு சிறிது அசதியாக இருந்தாலும் சரி எனக் குளித்துக் கிளம்பினேன் .
காரில் ஏறும்பொழுது மெல்ல ”குலசாமி கோயில்ல கல்யாணம் .கார் கோயில் பக்கம் வரைக்கும் போக வழி கிடையாது “ என்றார் ...

”ஓ! ... நடக்கணுமா??? .. அப்போ என்னால வரமுடியாது .... நீங்க போய்ட்டுவாங்க ”என்று இறங்க ஆரம்பித்தேன் .

சட்டென என் கையைப் பிடித்து உக்கார வைத்தார்.

” கண்டிப்பா போகணும் ...அப்பா வழியில் பையன் நெருங்குன சொந்தம் ..சென்னைல இருந்து இங்கே வந்திருக்காங்க ...பொண்ணு உங்க தாத்தா வழி (அம்மா வழிச் சொந்தம் ) ...கயத்தாறில் இருந்து வந்திருக்காங்க .....இங்கே கோயில்லதான் செய்யணுமுன்னு வேண்டுதலாம்..சீக்கிரமா போய்ட்டு வந்திடலாம் “ என்றார் ....

தட்டமுடியவில்லை எனக்கு ....அரை மனதோடு கிளம்பினேன் அவர்களோடு
”அரைமணி நேரத்துக்கு மேலே இருக்க மாட்டேன் ..இப்போவே சொல்லீட்டேன்” என்ற கண்டிசனோடு.

15 நிமிடப் பயணம்தான் ..இடம் வந்துவிட்டது.

வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினோம்.. இந்த இடம் பற்றிக் கேள்விதான் பட்டிருக்கிறேன் ...நேரில் இதுவரைக்கும் வந்ததில்லை....
மாடிவீடுகளுக்கு நடுவே ....ஒரு சிறிய பாதை..முடிவில் ஒரு வாழைத் தோரணத்துடன் ஒரு சின்ன அலங்கார வளைவு வரவேற்றது ...
இருவர் மட்டுமே ஒரே நேரத்தில் நுழையுமளவுக்கு சின்ன வாயில் ......

உள்ளே நுழைந்த எனக்கு ஆரம்ப அதிர்ச்சி காத்திருந்தது ...

அட....ஊருக்கு நடுவில் இப்படி ஒரு இடமா ???? உள்ளே சிறிய பூடத்துடன் கூடிய சுடலைசாமி கோவில்...முன்னால் பரந்து விரிந்த மரங்கள் அடர்ந்த தோட்டம் போன்ற அமைப்பு ..... பக்கத்தில் இருப்பவர் பேசுவது கேட்காத அளவுக்கு பலவிதமான பறவைகளின் குரல்கள் .......

கையைப் பிடித்துக் கொண்டு ”அப்பா போலவே இருக்கியே ராசா” என கண்ணத்தைப் பிடித்து இழுத்து உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்த பாட்டிகள்......
எல ...இவனப்பாருல ... டவுனுக்குள்ள இருந்துக்கிட்டு நம்மூருப் பயமாதிரியே திரியறான் ‘ ( பெரிய மீசை வைத்திருக்கிறேனாம் !!) என கையைப் பிடித்துக் கொண்டு கிண்ண்டலடிக்கும் தாத்தாக்கள் ,பெரிசுகள்......

’ஏவுலா... ஆத்தா...அப்பத்தா....பூட்டி...கொளுந்தியா....மச்சான்...’என காதைச் சுற்றிலும் உறவுமுறைகள் துள்ளிவிளையாடும் பேச்சுவார்த்தைகள் ......

என்னை அப்படியே வேரோடு புடுங்கி ...எங்கோ நாடுகடத்தி.....ஏதோ ஒரு கிராமத்துக்குள் நட்டு வைத்ததைப் போல உணர்ந்தேன்...
எனக்குள் புதைந்துகிடந்த ஏதோ ஒன்று பொங்கிப் பரவுவதையும் நன்றாகவே உணர்ந்தேன் ........

நகர வாழ்க்கையில் சுத்தம் , நாகரீகம் என்று பெயரால் அண்டை மனிதர்களிடம் இருந்து விலகியே பழக்கப் பட்டுவிட்டேன் ...இப்பொழுது இந்த பாசமான வருடல்களும் , கைப்பிடித்தல்களும் எனக்கு ஒரு புதிய உலகினைக் காட்டிக் கொண்டிருந்தது ....... நான் இது நாள் வரையில் ஒர் உன்னதமான வாழ்க்கைமுறையை மிகவும் இழந்திருக்கிறேன் என்பதும் புரிந்தது .......

மிக எளிமையாய் திறந்த வெளியில் திருமணம்... மணமக்கள் முன்னிலையிலேயே சாப்பாடு ....
சாப்பாடு முடிந்து பழைய நினைவுகளை அசைபோட்டபடியே பெரிசுகள்..எனது முன்னோர்களைப் பற்றி கதைகதையாகச் சொல்லிக் கொண்டிருக்க .......ஒரு வார்த்தை சொல்லாமால் அத்தனையையும் திறந்த வாய் மூடாமால் கேட்டுக் கொண்டிருந்தேன் ..அவர்களுக்குள் ஒன்றிப் போயிருந்தேன் ....

நான்கு மணி நேரங்கள் போனதே தெரியவில்லை ........
அம்மா மெதுவாக வந்து ‘‘ தம்பி போவோமா ? “ எனக் கேட்டார் ....

மெல்ல சிரித்து ...’’என்ன அவசரம் ...இருங்கம்மா ..போகலாம் ’‘என்றேன் .....

அனைத்து சடங்குகளும் முடிந்து , அனைவரையும் வழியணுப்பிவைத்துவிட்டுக் கிளம்பி வீடு வந்து சேரும் போது மணி மாலை 5 ....

எதையோ இழந்தது போல மனம் கனக்க வண்டியிலிருந்து இறங்கினேன் ...
குழந்தைகள் எல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு என்னைப் பார்த்து கிண்டலடித்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் ....

எதுவும் புரியாமல் கண் சுருக்கிஎன்ன என்பதுபோல அவர்களிப் பார்க்க

கடைக்குட்டி “அப்பா ...சட்டைல காக்கா ஆயி “ என சத்தமாகச் சொல்ல ...அதைக்கேட்ட மற்ற அனைத்தும் திசைக்கொன்றாகப் பறந்தன ...
நான் தொட்டுவிடக் கூடாதாம் ..தொட்டால் குளிக்க வேண்டுமாம் .......

மற்ற நேரமென்றால் பதறி உடனே அந்தச் சட்டையைக் கழற்றி வீசி இருப்பேன் ....
அன்றென்னவோ தெரியவில்லை.....சட்டையைக் கழட்ட எனக்கு மனமே வரவில்லை........

ஏன் எனவும் புரியவில்லை!!!!!
என்னவாயிற்று எனக்கு ?????

உங்களுக்காவது தெரியுமா ????


வரவேற்ற (மறைந்துபோன) ஒலி பெருக்கிதெய்வமாகிப் போன மரம்மணமக்கள் .(திறந்தவெளி மேடை )சாப்பாட்டுப் பந்தி


எளிய உணவுகொடுக்காப்புளி ( நான் நிறைய பொறுக்கி சாப்பிட்டேன் :))100 ஆண்டுகள் கடந்த நுரைக்கல் கிணறுகிண்டல் பேச்சுகள்
மணமக்கள்தலைமுறை

மறுமொழிகள்

0 comments to "ஒரு பயணத்தின் முடிவில்.... ஒரு தொடக்கம் !"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES